ஐஸ் பிரியாணி என்னும் அற்புதம்:
‘ ஐஸ் பிரியாணி’ என்று பழைய சாதம் அழைக்கப்படுகிறது. பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல் நலத்துக்கு பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூற்றாண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டு வந்த பழக்கம் நம் பாரம்பரியத்துக்கு உண்டு. சமீபத்தில் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பழைய சோற்றின் பெருமைகளையும் பயன்களையும் பட்டியலிட்டுள்ளது. அதன்பிறகே இன்றைய தலைமுறையினர் கூகுளில் பழைய சாதத்தை தேட ஆரம்பித்து இருக்கின்றனர்.
பழைய சாதம்:
பழைய சாதம், பழைய சோறு, பழஞ்சோறு, ஏழைகளின் உணவு,ஐஸ் பிரியாணி என்றெல்லாம் அழைக்கப்படும் பழைய சாதம் அமெரிக்கர்களுக்கும் பிற நாட்டினருக்கும் வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம், நம் முன்னோர்களுக்கு அன்றாடம் பழகிப்போன இதம் தரும் காலை உணவு. மதியம் வடித்து, மீந்து போன சாதத்தில் நீர் ஊற்றி விடுவார்கள். அடுத்த நாள் அது பழைய சாதம் ஆகிவிடும். அடுத்ததாக சோற்றை ஊற வைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது, மேலும் பல மருத்துவ நன்மைகளை கொண்டது. இந்த தண்ணீர் நீராகாரம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நீச்ச தண்ணி, பழைய சோற்று தண்ணீர் போன்ற பெயர்களும் உண்டு. இந்த நீராகாரம் உடல் உஷ்ணத்தை குறைக்க பெரிதும் உதவும், மேலும் எனர்ஜியை தரும் அற்புத பானம். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகு அறிமுகமான காபி நீராகாரத்தை ஓரங்கட்டியது. இதுவும் தமிழர்கள் நீராகாரத்தை மறக்க ஒரு காரணம்.
பழைய சாதத்தை பிரிட்ஜில் வைத்து குளிரூட்ட வேண்டிய அவசியமில்லை. கிச்சனில் ஒரு ஓரமாக பாத்திரத்தில் வைத்து மூடி வைத்தாலே போதும். காலையில் குளிர குளிர பழைய சோறு தயார். மண் பாத்திரத்தில் வைத்தால் இன்னும் அதிகமான பலன்கள் கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல கேரளாவிலும் பாரம்பரியமான உணவு இது. இந்த பழைய சாதத்தை தொட்டுக்கொள்ள ஒரு வெங்காயம், பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் போதும்.
பழைய சாதத்தில் லேசாக புளிப்புச் சுவை ஏற்பட காரணம் உண்டு. பழைய சாதத்தில் உருவாகும் லாக்டிக் ஆசிட் பாக்டீரியா தான் புளிப்புச் சுவை தருகிறது. மேலும் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாஷியம் ஆகிய சத்துக்களை பழைய சாதம் தருகின்றது. வடித்த சாதத்தில் உள்ள 3.4 மில்லிகிராம் இரும்புச்சத்து, பழைய சாதத்தில் 73.91 மில்லிகிராம் இரும்புச்சத்து ஆக மாறுகிறது. எல்லா உணவுகளுக்கும் ஒரு கால அளவு உண்டு. இந்த பழைய சாதத்தை நீர் ஊற்றிய 15 மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பழைய சாதம் சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும், தூக்கம் வரும் என்பதெல்லாம் உண்மை அல்ல. சர்க்கரை நோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு பழைய சாதத்தை சாப்பிடலாம்.
பழைய சாதத்தின் நன்மைகள்:
- உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் பழைய சாற்றில் அதிக அளவில் உள்ளன.
- காலையில் பழைய சாதத்தை சாப்பிடுவதால் வயிறு தொடர்பான நோய்கள் சரியாகும். மேலும் உடலில் இருக்கும் உஷ்ணத்தைப் போக்கும்.
- பழைய சாதம் மலச்சிக்கலை சரி செய்யும் தன்மை உடையது.
- பழைய சாதம் உடல் சோர்வை விரட்டும்.
- பழைய சாதம் ரத்த அழுத்தத்தை சீராக்கும். மேலும் உயர் ரத்த அழுத்தத்தை மெல்ல மெல்ல குறைய செய்யும்.
- பழைய சாதம் சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் நம்மை பிரஷ்ஷாக உணரச் செய்யும்.
- பழைய சாதம் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும், ஒவ்வாமை பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கும்.
- பழைய சாதம் எல்லாவிதமான வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
- புதிய நோய்த்தொற்றுகள் தாக்காமல் உடலைப் பாதுகாக்க பழைய சாதம் பெரிதும் உதவும்.
- பழைய சாதம் சாப்பிடுவதால் இளமையான தோற்றத்தை பெறலாம்.