அரிசி உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா?
உடல் எடையை(Weight Loss)குறைக்க வேண்டும் என்று முடிவு செய்ததும், முதலில் பலரும் அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். அரிசி உணவு எடையை அதிகரிக்கும் தன்மை உடையது என்ற கருத்து பலரிடம் உள்ளது. அரிசி உணவை தவிர்ப்பதால் மட்டும் எடையை குறைக்க முடியாது. சரியான உணவு முறை, உடற்பயிற்சி, சீரான தூக்கம், நேர்மறையான மனநிலை ஆகியவற்றின் மூலமே உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும். நமது தட்ப வெட்ப நிலையில் வளரும் உணவு வகைகளே நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அந்த வகையில் அரிசி உணவுகள் நமது உடலுக்கு நன்மை அளிப்பவை ஆகும்.
நாம் வெள்ளை அரிசியை அதிகம் பயன்படுத்துகிறோம். ஒரு கப் வேகவைத்த வெள்ளை அரிசியில் 242கலோரிகள்,4.4 கிராம் புரதம்,0.4 கிராம் கொழுப்புச்சத்து,53.4 கிராம் கார்போஹைட்ரேட், போலேட், தயமின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
சமைப்பதற்கு எளிதாக இருக்கும் காரணத்தால் பெரும்பான்மையோர் அரிசியை குக்கரில் வேக வைக்கின்றனர். அது தவிர்த்து நம் முன்னோர்களைப் போன்று வடித்து சாப்பிடும் முறையை பின்பற்றலாம். இதன் காரணமாக உடல் எடையை(Weight Loss) அதிகரிக்கச் செய்யும் மாவுச் சத்தை குறைக்கலாம். அரிசி மாவை தோசையாக சுட்டு சாப்பிடுவதை விட இட்லியாக ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அரிசி சாதம் ஒரு பங்கும், காய்கறி, கீரைகள், பருப்பு ஆகியவற்றை சேர்த்து இரண்டு பங்கும் சாப்பிடலாம். வெள்ளை அரிசிக்கு பதிலாக சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமான சோடியம், கொழுப்பு போன்றவை அரிசியில் மிகக் குறைவான அளவே உள்ளன. பட்டை தீட்டப்படாத அரிசியில் உள்ள நார்ச்சத்து உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதற்கு அவசியமாகும். எனவே ஏராள நன்மைகளை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு அரிசி ஒரு சிறந்த உணவாகும்.