குபேரர்:
செல்வத்தை அருளக்கூடிய தெய்வங்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் திருப்பதி வெங்கடாசலபதி. அவருக்கே கடன் கொடுத்தவர் தான் குபேரர். குபேரரின் அருளை நாம் பெற வேண்டும் என்றால் அவரை நினைத்து வணங்க வேண்டும். அவருக்காக குபேர தீபம் என்று வீட்டு பூஜை அறைகளில் தனியாக ஒரு தீபத்தை ஏற்றி வைப்பார்கள். அதோடு சேர்த்து இந்த வழிபாட்டையும் மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் குபேரரின் அருட்பார்வை நம் மீது படும்.
இந்த வழிபாட்டை மேற்கொள்வதற்கு நமக்கு குபேரரின் படம் தேவைப்படும் அல்லது குபேரனின் சிலை இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். லட்சுமி குபேர புகைப்படம் ஆக இருந்தால் அது சிறப்புக்குரியதாக இருக்கும். குபேரருக்கு தாமரைத் தண்டு திரி பயன்படுத்தி நெய் தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அவரின் படத்திற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் பன்னீரையும் தண்ணீரையும் சம அளவு ஊற்றி வைக்க வேண்டும்.அவருக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.தாமரைப்பூ, மல்லிகைப்பூ மற்றும் மரிக்கொழுந்து இவை மூன்றும் இடம்பெற்றிருக்க வேண்டும். குபேரரின் அஷ்டோத்திரத்தை கூறியவாறு குபேரரின் படத்திற்கு பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது அர்ச்சனை செய்த அந்தப் பூக்கள் நாம் பாத்திரத்தில் நிரப்பி வைத்திருக்கும் பன்னீரில் விழுமாறு அர்ச்சனை செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு குபேரருக்கு கற்கண்டு நெய்வேத்தியமாக வைத்து, சாம்பிராணி போட்டு, கற்பூர தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு அர்ச்சனை பூக்கள் விழுந்த பன்னீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய எதிர்மறை ஆற்றல்கள் விலகுவதோடு, வீட்டின் அனைத்து இடங்களிலும் குபேரரின் அருள் நிரம்பி வீடு செல்வ கடாட்சத்துடன் திகழும்.